Saturday, September 24, 2005

முன்னுதாரண மனிதர்கள் - சுஹாஸ் கோபிநாத்


முன்னுதாரண மனிதர்கள் - 1

2004 பெங்களூர் , இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் கட்டிடம். அன்றைய நிகழ்ச்சியான 'இந்தியாவில் கல்வி நிலை' என்கிற கருத்தரங்குக்காக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினான் சகஜ உடையிலிருந்த அந்த 17 வயது இளைஞன். வாசலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர் " இந்த நிகழ்வு நிறுவன தலைமை அதிகாரிகளுக்கானது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள முடியாது" என்று உள்ளே விட மறுக்க அந்த இளைஞர் தனது மொபைல் தொலைபேசியில் யாருடனோ பேசினார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு விரைந்து வந்த அமைப்பாளர்கள் அந்த இளைஞரிடம் மன்னிப்புக் கோரிவிட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன்பின் தான் அந்த அப்பாவி பாதுகாப்புப் பணியாளருக்குத் தெரிந்தது அந்த 17 வயது இளைஞர் சுஹாஸ் கோபிநாத் 350 பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் என்பதும், அன்று அங்கு அவர் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதும்.

அந்த இளைஞருக்கு இது போன்ற நிகழ்வுகள் புதிதல்ல. இந்தியாவில் அரசாங்கமே 18 வயது முடிந்தால் தான் வயது வந்தோராகக் கருதுகிறது. தன் சொந்த சம்பாத்தியத்தில் கார் வாங்கிய சுகாசுக்கு வயது இல்லாததால் இன்னும் லைஸன்ஸ் வாங்க இயலவில்லை. பல முக்கிய கம்பெனி ஒப்பந்தங்களை முடித்தாலும் எந்த சட்டரீதியான பேப்பரிலும் கையெழுத்திட முடிவதில்லை.

அவருடைய பொழுதுபோக்கே வெற்றிச் சரித்திரமாக மாறிய வரலாற்றை அவரே சொல்கிறார் கேளுங்கள்.

"மதிகரேயில் உள்ள ஏர் ஃபோர்ஸ் ஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருந்த போது அடிக்கடி பக்கத்தில் இருந்த இணைய மையத்திற்கு அடிக்கடி செல்ல நேரிட்டது. அந்தப் புதிய உலகத்தில் நான் அமிழ்ந்து போனேன். அது என்னுடைய நிரந்தரப் பொழுதுபோக்கானது. என் பெற்றோரின் மிகுந்த எதிர்ப்பிற்கிடையேயும், மணிக்கணக்காக கணினி முன் பொழுதைக் கழித்தேன். என் மூத்த சகோதரர் ஸ்ரேயாஸ் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். எச்டிஎம்எல், ஏஎஸ்பி மற்றும் பல நிரல்களை இணைய மையத்திலேயே கற்றுத் தேர்ந்தேன்."
2000ஆம் ஆண்டில் மே 14ம் தேதி, தன்னுடைய நண்பர்கள் கிளிஃபோர்டு லெஸ்லி மற்றும் வினயுடன் சேர்ந்து, தன்னுடைய சொந்த இணையத்தளமான www.coolhindustani.comஐத் துவக்கினார் சுகாஸ். "ஆரம்பத்தில் என்னிடம் முதலீடு என்பதே இல்லை. என்னுடைய பெற்றோரும் இதற்காக ஐந்து பைசா கூடத் தர முடியாது என்று கூறி விட்டனர். எனவே இது குறித்து 'நெட்வொர்க் சொல்யூஸன்ஸ் இன்க்' என்ற அமெரிக்கக் கம்பெனிக்கு எழுதினேன். அவர்கள் உடனே ஒத்துக் கொண்டனர்" என்று சொல்லும் சுகாசுக்கு கணினி மற்றும் இணைய அறிவும் இயல்பாகவே பற்றிக் கொண்டது. அதனால் தான் அவரால் அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நான்கு பேர் கொண்ட இணைய நிறுவனம் துவங்க முடிந்தது. இப்போது 11 நாடுகளில் 350 பணியாளர்களுடன் செயல்படும் இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் 1 மில்லியன் டாலர்.

சரி. பணியாளர்கள் ஒரு இளம் வயது தலைமை அதிகாரியிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்?
"என்னுடைய பெங்களூர் அலுவலகத்தில் மட்டும் 15 முழுநேர கணிப்பொறிப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நான் அவர்களுக்கு முதலில் நண்பன். பிறகு தான் தலைமை அதிகாரி. இந்த நடைமுறை எனக்கு மிகச் சிறந்த அணுகுமுறையாக அமைந்திருக்கிறது".

சரி படிப்பு?
"என்னுடைய படிப்பு பாதிக்கப்பட்டது என்பது உண்மை தான். பத்தாம் வகுப்பில் 80 சதம் ஸ்கோர் செய்த நான் பியூசியில் 65 சத மதிப்பெண்கள் தான் ஸ்கோர் செய்ய முடிந்தது. முடிந்த அளவு வகுப்புகளில் நான் கலந்து கொள்கிறேன் என்றாலும் சில சமயம் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நான் சாக்குபோக்கு சொல்ல முடியாமல் போகிறது. தேர்வு நேரங்களின்போது எனக்கு உடல்நிலை சரியில்லை என் வாடிக்கையாளர்களிடம் சொல்ல நேர்வதும் உண்டு" என்று யதார்த்தத்தை இயல்பாகப் போட்டுடைக்கிறார்.

பதினேழு வயதில் நிறுவனம் துவங்கிய இவருக்கு விரிவாக்கத் திட்டங்கள் இல்லாமல் போகுமா என்ன? தன் வயதொத்த இளைஞரெல்லாம் வீதியில் பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது இவரோ "அடுத்த ஆண்டிற்குள் நிர்வாக ஆலோசனை நிறுவனம் துவங்க வேண்டும்" என்று தன் கம்பெனியின் திட்டங்கள் குறித்துப் பேசுகிறார். ஒரு ஜாலியான சராசரி இளைஞரின் வாழ்க்கையைத் தவற விட நேர்ந்தது குறித்து இவர் என்ன சொல்கிறார்? "சில சமயங்களில் வருத்தமாகத் தான் இருக்கும் அநேக நேரங்களில் கோட்சூட்டுடனும் மனதில் படிப்பைப் பற்றியோ அல்லது வேலையைப் பற்றியோ பரபரத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று. என்ன செய்வது. என் வெற்றிக்கு நான் கொடுத்த விலை தான் அது என்பது எனக்குத் தெரியும்" சலனமில்லாமல் சொல்கிறார் சுஹாஸ்.

"புதிய தொழில்முனைவர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி"
இந்தக் கேள்விக்கு மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பதில் சொல்கிறார் சுஹாஸ் "செய்தியெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவ முதிர்ச்சி வந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. நான் சொல்வதெல்லாம் -உங்களால் முடியும் என்று உங்கள் மனதிற்குத் தோன்றினால் தைரியமாக முயலுங்கள் என்பது தான்". என்று சொல்லும் சுஹாஸ் தத்துவார்த்தமாகவும் பேசுகிறார். "உங்கள் வாழ்க்கையில் வேலை தவிர்த்த பிற விஷயங்களுக்கும் தகுந்த நேரம் ஒதுக்குங்கள். இல்லையேல் அதற்காக வருத்தப்படக்கூட நேரம் இல்லாதபடி வேலை உங்களை ஆக்கிரமித்து விடும்".

தாங்கள் இந்த உலகுக்குச் சொல்லும் செய்தி என்ன என்று மகாத்மா காந்தியிடம் ஒருமுறை கேட்டபோது அவர் சொன்னார் " என் வாழ்க்கையே நான் இந்த உலகுக்குச் சொல்லும் செய்தி" என்று. சுஹாஸ் கோபிநாத் அப்படி சொல்லவில்லை என்றாலும் கூட அவர் சொன்ன செய்திகளை விட அவரது வாழ்க்கை சொல்லும் செய்தி தான் அதிகம் என்று நமக்குத் தோன்றுகிறது.

1 comment:

NambikkaiRAMA said...

//உங்கள் வாழ்க்கையில் வேலை தவிர்த்த பிற விஷயங்களுக்கும் தகுந்த நேரம் ஒதுக்குங்கள். இல்லையேல் அதற்காக வருத்தப்படக்கூட நேரம் இல்லாதபடி வேலை உங்களை ஆக்கிரமித்து விடும்".//
அதனால்தான் வலைப்பக்கம் வருகிறோம். இந்த செய்தி ஆங்கில மடலில் எனக்கும் வந்ததது. அந்த இளைஞன் அனைவருக்கும் ஒரு முன்னுராதரணம்.