Friday, June 10, 2005

கையறு நிலை கடந்து தையினை வரவேற்போம்

இரக்கம் என்பது இறையே
உனக்கும் இல்லாமலா போனது?
தன் வலி காட்ட உனக்கு
இவ்வழி தானா கிடைத்தது,

எளியோரை வலியோர் வாட்டினால்
வலியோரை தெய்வம் வாட்டும்
என்று சொன்ன பெரியோரே
எளியோரை தெய்வம் வாட்டினால்
சொல்லாமல் எங்கு சென்றீர்?

கொடிது எவையென
மொழியுரைத்த அவ்வையே
சுனாமி என ஒரு துயரம்
உள்ளதை நீ அறிவாயோ?

உயிராசை மண்ணில்
மனிதர்க்கே மரபென்றால்,
ஊரோர் போற்றும் இறையே
உனக்குமா வந்தது,

நீ கண்ணயர்ந்த நேரத்தில்
கடலரக்கன் துணிந்தானா?
கடலரக்கன் குணம் காட்ட
நீ தான் கண்ணயர்ந்தாயா?

கடலே உலை பொங்க உனையே
எதிர்பார்த்த மக்களை
அலை பொங்கி நீயும்
அழித்திடத் துணிந்தாயோ?

கொடி பிடித்தார் கூச்சலிட்டார்
குழப்பம் பல விளைத்திட்டார்
பேரணி மாநாடு என
மாநகரைக் கெடுத்திட்டார்,

ஊருக்காய் உயிர் கொடுப்போம்
என மார்தட்டிப் பேசிட்டார்,
இந்தப் படை போதுமா என
இன பலமும் காட்டிட்டார்,

கலகத்திற் கஞ்சாத கழகத்தோரே
காணாமல் எங்கு நீர் சென்றீட்டீரே,
தேர்தல் நிதி குவித்த கட்சியினர்க்கு
ஆறுதல் நிதி குவிக்கும் வலியிலையோ?

ஆர்ப்பாட்டம் புரிந்திட்ட
அரசியலோ ரெல்லாம்
காணாமல் போயினரோ
அறிகிலேனே.

மனிதப் பிறவி எண்ணி
மாய்ந்துருகும் நேரத்தில்
மருந்தென வந்திட்டார்
மாந்தருள் மாண்புளரே,

இத்தனை இழந்தும்
இறக்க மனமில்லையெனில்
இருக்கும் மாந்தரின்
இரக்கத்தின் காரணமே.

மண்ணில் சகமாந்தர்தம்
மனிதத்தைக் காண்கையிலே
மரண பயம் எதிர்கொள்ளும்
மாவலியும் தோன்றிடுதே,

தங்கள் கொண்டாட்டம் துறந்திட்டு
எங்கள் துயரத்தில் தோள் கொடுத்த
எந்நாட்டு மாந்தர்க்கும்
எம்தலை வணங்கிடுதே,

இந்நிலையில் இறைவசம்
நான் வேண்டும் பொருளுண்டு,
அறியாமல் தவற்றினையே யாம்
இழைத்தாலும் பொறுத்திடுவாய்,

தை பிறக்க வழி பிறக்கும்
எம் வாழ்விலும் ஒளி பிறக்கும்
எனும் நம்பிக்கை கொள்கின்றோம்
நீ அதனைக் காத்திடுவாய்.

.................................................................ஜெய்ஹிந்த் ............................................................................

1 comment:

Anonymous said...

Hi, just came across your kansas city home loans blog. What a great site. I also have a site relating to the kansas city home loans niche that I think your readers would be interested in. Would love you to stop by for your feedback